ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மீன் கொடி பறந்த வரலாறு.......

பழம்பெரும் பாண்டியர்களின் வரலாற்றை பேசும் பகுதி
(தமிழ் மண்ணின் மூத்த குடிமக்கள் பாண்டியர்கள், பழம்பெருமை வாய்ந்த அவர்களின் சிறப்பையும், பெருமைகளையும் தெள்ள, தெளிவாய் எடுத்துரைக்கிறது இந்தப் பகுதி. பல்வேறு பாண்டியர்களின் வரலாற்றை கால வாரியாக இத்தொடரில் நீங்கள் அறியலாம்)

பாண்டிய மண்டலமும் அதன் நாகரிகமும்...
 
முற்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப் பரப்பு தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது தமிழ் நாடு என்று கூறப்பட்டது. இத்தமிழ் நாடு குடபுலம், குணபுலம், தென்புலம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனைச் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் ஆட்சி புரிந்து வந்த நிலப்பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என்று சொல்லப்பட்டன.

இதில் பாண்டிய மண்டலம் பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் பாண்டியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு மேன்மையுற்றுவரும் பழம் பெரும் குடியினர். இவர்கள் தொன்றுதொட்டு இந்த நிலப்பகுதியிலே வாழ்ந்து வருகின்றனர். வட மொழியினரின் ஆதிகாவியம் என்று கூறும் வான்மீகி இராமாயணத்தில் பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலைநகர் ‘கபாடபுரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபாடபுரம் பொன்னாலும், மணிகளாலும் அணி செய்யப்பட்ட கோட்டை வாயிலின் கதவுகளை உடையது என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கூறப்படும் வடமொழிப் புலவர் காத்தியாயனர் பாண்டியர் என்னும் மொழிக்கு இலக்கணம் கூறியுள்ளார். அசோக மன்னன் கல்வெட்டுக்களில் பாண்டியர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

Royal emblem of the Pandyas

பௌத்தர்களால் வரையப் பெற்ற பழம்பெரும் இலங்கையின் வரலாற்று நூலாகிய மகாவம்சம் கி.மு. 478-ல் வாழ்ந்த இலங்கை வேந்தன் விசயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தான்; அவன் தோழர்கள் பாண்டிய நாட்டு அரசாங்க அதிகாரிகளின் பெண்மக்களை மணந்துகொண்டு பாண்டிய நாட்டுப் பெரிய மரக்கலத்தில் ஏறி வந்தார்கள் என்று கூறுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டினின்று சந்திர குப்தன் அரசவைக்குப் சென்ற அரச தூதுவனாகிய மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான்.

ரோம் நாட்டில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்டஸ் என்னும் பேரரசன் அரசவைக்குப் பாண்டியன், தன் அரசத் தூதுவரை அனுப்பி நட்பு வளர்த்து இரு நாடுகளும் அரசத் தூதுவர்களைப் பரிமாறிக் கொள்ளச் செய்தான். அதனால் இரு நாடுகளுக்குமிடையே வாணிகம் வளர்ந்தது. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பிளினி என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் பழம் பாண்டியரின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான். “பாண்டி நாடே பழம் பெரும் நாடு” என்று தேவார ஆசிரியர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.
பாண்டிய நாகரிகம்
 
பாண்டிய நாடு கிறிஸ்து பிறப்பதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனிசிறந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டது; கழகங்கள் கண்டு கருத்தோடு தமிழ்க் கருவூலத்தை வளர்த்து வந்தது. பாண்டிய நாட்டில் மகேச சூத்திரம் என்னும் பேரிலணக்கம், களவியல் என்னும் ஐந்திணை அகநூல், அகத்தியம், முதுநாரை, முதுகுருகு, ஐந்திரம், பரதம், கூத்தநூல், இசை நுணுக்கம், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற எண்ணற்ற இலக்கியங்கள் எழுதப் பெற்றன. அஃது அறநெறிபற்றி ஆட்சி நடத்தும் அரசர்களையும், அரும் பெரும் அரசியல் அமைப்பையும் பெற்று விட்டது.

பாண்டிய நாட்டில் கலைகளும், மொழியும், எழுத்தும், செல்வமும், கைத்தொழில்களும், பயிர்த் தொழில்களும் வளம் பெற்றெழுந்தன. வணிகம் வளர்ந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் பெருகின. கலங்கள் கட்டப்பட்டன. யவனர்களோடு பெரும் அளவில் கடல் வாணிகம் நடைபெற்றது (1) இருமீன்கள் தீட்டிய பாண்டிய நாட்டுக் கொடிகள் பறந்த நாவாய்கள் ஆழ்கடல் தாண்டி வெளி நாடுகள் சென்று மீண்டும் வந்தன.

கோநகர்
 
பாண்டிய நாட்டிற்குப் புறநகர் (துறைமுகப் பட்டினம்)கொற்கையாகவும் பின்னர், பழைய காயலாகவும் இருந்து வந்தது. அகநகர் (கோநகர்) மதுரையாக இறுதிக் காலத்தில் இருந்து வந்தது. கோநகரில் அரசர் இருந்து ஆட்சி புரிந்து வந்தார். இளவரசர் கொற்கையில் இருந்து மன்னர்க்குத் துணைபுரிந்து வந்தார். கொற்கை அருகே கடலில் ஏராளமான முத்துக்கள் கிடைத்தன. கொற்கை, முத்துக் குளிக்கும் மூதூராக விளங்கியது. கொற்கைத் துறைமுகத்தில் யவனர்கள், அரேபியர்கள் கப்பல்களும், பாண்டியர்களின் பல்வேறு வகையான படகுகளும், தோணிகளும், அம்பிகளும், நாவாய்களும் ஏராளமாக இருந்து வந்தன. யவனர்கள் பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் கொடுத்து முத்து, மிளகு, சந்தனக் கட்டை முதலிய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

அஃக சாலை
 
பாண்டியர்கள் உள்நாட்டுச் செலாவணிக்கும் அயல் நாட்டுச் செலாவணிக்கும் ஏராளமான காசுகளை வெளியிட்டு வந்தனர். பாண்டியர் அரசாங்கத்திற்குப் பொன், வெள்ளி, செம்பு ஆகிய தாதுப் பொருள்களில் காசு வெளியிடும் அஃகசாலைகள் கொற்கையிலும் மதுரையிலும் இருந்து வந்தன. காசு வெளியிடும் இடத்திற்கு அஃகசாலை என்று பெயர். காசு வெளியிடும் நிலையம் இருக்கும் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர். கொற்கையில் காசு வெளியிடும் தெருவும் நிலையமும் அழிந்துவிட்டன. ஆனால் அத்தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் இன்றும் இருந்து வருகிறது. அப்பிள்ளையாரை மக்கள் அஃகசாலை விநாயகர் என்று அழைத்து வருகிறார்கள். உரோமர்கள், பாண்டியர்கள் அனுமதி பெற்று மதுரையருகே குடியேறித் தங்கள் செலாவணிக்குச் செப்புச் காசுகள் வெளியிட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக