திங்கள், 13 அக்டோபர், 2014

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும் !!!!

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன.
வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் படுத்து உறங்கிய ஆதிமனிதன், சற்று சுகமாகப் படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள். முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற மட்டையை இரண்டாக வெட்டிப்பிளந்துவிட்டால் மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் கிடைக்கும்.
இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.
இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இதே போல இளம் பனை ஓலையை வெட்டி, அதையும் மட்டைப்பகுதியில் இரண்டாக வெட்டிப்பிளந்து (முழு ஓலையையும்) விசிறி மாதிரி விரித்து அதன் மேல் மண்ணை அல்லது மணலை அள்ளிப் போட்டு வைத்தால் படுப்பதற்குப் பனை ஓலையால் ஆன இரண்டு பாய்கள் கிடைத்துவிடும்.
ஆட்டுக்கிடையில் காவலுக்கு இருப்பவர்கள் இத்தகைய பனை ஓலையைப் பயன்படுத்துவார்கள். பனையின் குருத்து ஓலையை வெட்டி, அதைப் பக்குவமாக நீரில் நனைய வைத்து ஓலை இதழ்களை மட்டும் கிழித்தெடுத்து ஒருவிதப் பாய்களை முடைவார்கள். இந்தப் பனை ஓலைப் பாய்களைச் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். குருத்து ஓலை இலக்குகளால்(இதழ்களால்) நெய்யப்படும் இந்தப் பனை ஓலைப் பாய்களும் படுப்பதற்கு சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
கொஞ்சம் வசதி வாய்ப்புள்ளவர்கள் தாழை மடல்களால் பின்னப்பட்ட பாய்களில் படுப்பார்கள். இது மெத்தை போன்று படுப்பதற்கு மிகவும் சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
தாழை மடல்களை வெட்டித் தண்ணீரில் ஊறவைத்து, அதை இலக்கு(இதழ்)களாகப் பிரித்து அதிலிருந்து தாழம்பாய்களைப் பின்னுவார்கள்.
நாணல் புல் நீண்டு வளரும். அதை அறுத்து வந்து மிதமாகக் கையை வைத்து, அவைகளைப் பனை நாரால் கோத்து ஒருவிதப் பாயை உருவாக்குவார்கள். இதற்கு நாணல் பாய் என்று பெயர். இதே நாணலை வைத்து, மழைக்காலத்தில் நனையாமல் போட்டுக் கொள்ள ‘கொங்காணி’களையும் இந்த நாணல் தட்டையில் இருந்து தயாரிக்கிறார்கள். நாணல் பாய் மெத்தைபோல் படுப்பதற்கு ‘மெத்,மெத்’ என்று சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்த பின்தான் கோரைப்பாய் நெய்தார்கள். ஆற்றோரத்தில் நீரோட்டம் உள்ள இடங்களில் கோரைப்புற்கள் வளர்கின்றன. இந்தக் கோரைகள் முளைத்ததில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்ப்பிடிப்பான நிலத்தில் நின்று வளர்வதால், இதிலிருந்து செய்யப்படுகிற பாய்கள் படுப்பதற்கு, சுகமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.

இதுவரை, நாம் பார்த்த பாய்கள் எல்லாம், தென்னை, பனை, தாழை, நாணல், கோரைப்புல் போன்ற தாவரங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.
தாவரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டதால் இந்தப் பாய்களில் படுத்து எழுந்தால் உடலின் வெப்பம்
குறையும். உடல் வலியும் போகும். ஒரு விதத்தில் மறைமுகமான மருத்துவக்குணமாகும் இது.
இன்றைக்கு நமக்கு பன்னாட்டு நுகர் கலாச்சாரத்தால் கிடைக்கிற போம் மெத்தைகள் உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் மேலும் அலுப்பை ஏற்படுத்தும்.

மேலே கண்ட பாய்கள் பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதோடு அவையாவும் ஒருவிதை இலைத் தாவரங்கள் என்பதையும் நாம் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும். ஒற்றை விதை இலைத்தாவரங்கள் (புல் முதல் பனை வரை) யாவும் குளிர்ச்சியைத் தருவன என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும்.
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகளில் ஆற்றோரம் உள்ள கோரைகளை அறுத்து வந்து முதலில் இரண்டாகக் கீறுவார்கள். இதற்கு சூரிக்கத்தி என்ற இருபுறமும் கூரான கத்தி பயன்படுத்தப்படும். இப்படிக் கீறிய கோரைகளை ‘முடி’களாக(கட்டுகளாக) கட்டி வெயிலில் காய வைப்பார்கள். பிறகு அக்கட்டுகளை ஆற்றுநீரில் அல்லது குளத்து நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைப்பார்கள். இப்போது இரண்டாகக் கீறப்பட்ட கோரைகள் சற்று உப்பி இருக்கும். எனவே அதை மீண்டும் இரண்டாக சூரிக்கத்தி வைத்துக் கீறுவார்கள். பிறகு அக்கோரைகளை முடிகளாக(கட்டுகளாக) முடிந்து வெயிலில் காய வைப்பார்கள். காய்ந்த கோரைகளை மூன்றடி உயரம், நான்கடி உயரம் என்று உயர அளவுப்படி பிரித்துக் கொள்வார்கள். மொத்தக் கோரையில் பத்தில் ஒரு பங்குக்கோரையைப் பிரித்து எடுத்து அதில் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று தனித்தனியாகச் சாயம் ஏற்றிக்கொள்வார்கள்.
ஊரைச்சுற்றி உள்ள கற்றாழை வேலிகளில் உள்ள கற்றாழைக் குருத்துகளை ஒடித்து வந்து, அதை ஒரு பலகை மற்றும் 'தரஸ்கு' (இருபுறமும் கைப்பிடியுள்ள கூரான நீள்வசமான அரிவாள்) என்ற கருவியில் இழைத்து எடுத்து அதில் இருந்து ‘மறல்’ எடுப்பார்கள். இது கிழவியின் நரைத்த தலை முடி மாதிரி நீளமாக இருக்கும்.
இந்த மறலைப்பிரித்த பின் அதையே கொட்டையாக (முடியாக) கட்டி அதிலிருந்து ‘கதிர்’ என்ற கருவி மூலம் நூல் நூற்பார்கள்.

இப்போது பாய் நெய்யத் தேவையான மூலப்பொருள்களான கோரையும், நூலும் தயார். இந்த இரண்டு மூலப்பொருள்களையும் நெசவாளர்கள், இயற்கைத் தாவரங்களில் இருந்து (கோரைப்புல், கற்றாழை) எளிய உழைப்பு மூலம் பெற்றுக் கொண்டார்கள்.
இனி, பாய் நெசவு செய்ய, முக்காலி மிதிபட்டை, அன்னகுழல், குச்சாலி, இழுத்துக்கட்ட கயிறுகள், இருந்து நெசவு செய்யச் சிறிய நீள்வச பெஞ்சுகள் முதலிய எளிய கருவிகள்தான் தேவை.
இப்படித் தென் மாவட்டங்களில் இயற்கையாய்க் கிடைக்கும் தாவர மூலப்பொருள்களில் இருந்து கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும், தாழம்பாய்களும் தயாரிக்கப்பட்டன. இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த கீழ்த்தட்டு மக்களே பாய் நெசவு என்ற தொழிலைச் செய்து வந்தார்கள்.
பாய்களை இன்று பிளாஸ்டிக் கோரைகளால் இயந்திரங்களைக் கொண்டு தயாரிக்கிறார்கள். இத்தகைய செயற்கை இழைகளால் ஆன பாய்கள் நம் உடல்நலத்திற்கும், தட்பவெப்பத்திற்கும் ஏற்றதல்ல.
‘பாய்’ என்ற உடன் பலரின் நினைவிற்கு பத்தமடைப் பாய்தான் நினைவுக்கு வருகிறது. பத்தமடைப்பாய்கள் மெல்லிய கோரைகளைக் கொண்டும், பருத்தி நூலைக் கொண்டும், கடினமான உழைப்பைக் கொண்டும் முக நுட்பமான வேலைப்பாடுகளுடன், கலையழகுடன் நெய்யப்படுகிறது. இத்தகைய பத்தமடைப் பாய்கள் இன்று ஆடம்பரப் பொருள்களாகவும் கலைப்படைப்பாகவும் மாறி விட்டது. இப்பாய்களையும் பத்தமடை என்ற ஊரிலும், அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமியச் சமுதாயத்தவர்களால் நெய்யப்படுகிறது.

ஓலைகளால் பாய்கள் பின்னப்படும். கோரைகளால் பாய்கள் நெய்யப்படும். (தமிழனின் கலைச் சொல்லாட்சி எவ்வளவு அருமையாக உள்ளது பார்த்தீர்களா...)
பாய் ஓய்வின் குறியீடு, இல்லற இன்பத்தின் அடையாளம். ‘பாய் விரிக்க புன்னை மரமிருக்க’ என்ற பாடல் வரிகளில் காதல் உணர்வுடன் ‘பாய்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தென் மாவட்ட முஸ்லிம்கள்தான் மகளைக் கட்டிக் கொடுக்கும்போது பலவித சீர் செனத்திகளைக் கொடுக்கிறார்கள். அத்தோடு மறக்காமல் ஒரு பாயையும், தலையணையையும் கொடுக்கிறார்கள். மகளை மருமகனுக்குக் கட்டிக் கொடுக்கிறபோது கூடவே பாயையும் கொடுத்து அனுப்புவதில் வாழ்வியல் சார்ந்த உள்அர்த்தம் வாசகர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற பயன்பாட்டு
அம்சம் நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.

திங்கள், 6 அக்டோபர், 2014

தமிழ் எழுத்துக்களும் தமிழ் இலக்கங்களும் நாணயத்தில் பயன்படுத்தி உள்ள நாடு.

தமிழ் எழுத்துக்களும் தமிழ் இலக்கங்களும் நாணயத்தில் பயன்படுத்தி உள்ள நாடு.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள்
௦ – 0, ...

௧- 1,
௨- 2,
௩- 3,
௪- 4,
௫- 5,
௬- 6,
௭- 7,
௮- 8,
௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை இந்துத் தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், மேலும் 3300 பேர் தமிழும் இன்னொரு மொழியும் வீட்டில் பேசுவதாகவும் என அரசுக் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்..
தமிழர்கள் திறமைவாய்ந்த உழைப்பாளிகளாக அறியப்பட்டனர். எனவே, மொரிசியசு அரசு, மொரிசியசு ரூபாய் பணத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறித்து வெளியிடுகிறது. தைப்பூசம், தீபாவளிப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பல இன மக்களின் மொழிக் கலப்பால் மொரிசியசு கிரியோல் என்னும் மொழி உருவானது. இம்மொழியின் பல சொற்கள் தமிழ்ச் சொற்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

மீன் கொடி பறந்த வரலாறு.......

பழம்பெரும் பாண்டியர்களின் வரலாற்றை பேசும் பகுதி
(தமிழ் மண்ணின் மூத்த குடிமக்கள் பாண்டியர்கள், பழம்பெருமை வாய்ந்த அவர்களின் சிறப்பையும், பெருமைகளையும் தெள்ள, தெளிவாய் எடுத்துரைக்கிறது இந்தப் பகுதி. பல்வேறு பாண்டியர்களின் வரலாற்றை கால வாரியாக இத்தொடரில் நீங்கள் அறியலாம்)

பாண்டிய மண்டலமும் அதன் நாகரிகமும்...
 
முற்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப் பரப்பு தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது தமிழ் நாடு என்று கூறப்பட்டது. இத்தமிழ் நாடு குடபுலம், குணபுலம், தென்புலம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனைச் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் ஆட்சி புரிந்து வந்த நிலப்பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என்று சொல்லப்பட்டன.

இதில் பாண்டிய மண்டலம் பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் பாண்டியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு மேன்மையுற்றுவரும் பழம் பெரும் குடியினர். இவர்கள் தொன்றுதொட்டு இந்த நிலப்பகுதியிலே வாழ்ந்து வருகின்றனர். வட மொழியினரின் ஆதிகாவியம் என்று கூறும் வான்மீகி இராமாயணத்தில் பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலைநகர் ‘கபாடபுரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபாடபுரம் பொன்னாலும், மணிகளாலும் அணி செய்யப்பட்ட கோட்டை வாயிலின் கதவுகளை உடையது என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கூறப்படும் வடமொழிப் புலவர் காத்தியாயனர் பாண்டியர் என்னும் மொழிக்கு இலக்கணம் கூறியுள்ளார். அசோக மன்னன் கல்வெட்டுக்களில் பாண்டியர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

Royal emblem of the Pandyas

பௌத்தர்களால் வரையப் பெற்ற பழம்பெரும் இலங்கையின் வரலாற்று நூலாகிய மகாவம்சம் கி.மு. 478-ல் வாழ்ந்த இலங்கை வேந்தன் விசயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தான்; அவன் தோழர்கள் பாண்டிய நாட்டு அரசாங்க அதிகாரிகளின் பெண்மக்களை மணந்துகொண்டு பாண்டிய நாட்டுப் பெரிய மரக்கலத்தில் ஏறி வந்தார்கள் என்று கூறுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டினின்று சந்திர குப்தன் அரசவைக்குப் சென்ற அரச தூதுவனாகிய மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான்.

ரோம் நாட்டில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்டஸ் என்னும் பேரரசன் அரசவைக்குப் பாண்டியன், தன் அரசத் தூதுவரை அனுப்பி நட்பு வளர்த்து இரு நாடுகளும் அரசத் தூதுவர்களைப் பரிமாறிக் கொள்ளச் செய்தான். அதனால் இரு நாடுகளுக்குமிடையே வாணிகம் வளர்ந்தது. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பிளினி என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் பழம் பாண்டியரின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான். “பாண்டி நாடே பழம் பெரும் நாடு” என்று தேவார ஆசிரியர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.
பாண்டிய நாகரிகம்
 
பாண்டிய நாடு கிறிஸ்து பிறப்பதற்கு பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனிசிறந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டது; கழகங்கள் கண்டு கருத்தோடு தமிழ்க் கருவூலத்தை வளர்த்து வந்தது. பாண்டிய நாட்டில் மகேச சூத்திரம் என்னும் பேரிலணக்கம், களவியல் என்னும் ஐந்திணை அகநூல், அகத்தியம், முதுநாரை, முதுகுருகு, ஐந்திரம், பரதம், கூத்தநூல், இசை நுணுக்கம், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற எண்ணற்ற இலக்கியங்கள் எழுதப் பெற்றன. அஃது அறநெறிபற்றி ஆட்சி நடத்தும் அரசர்களையும், அரும் பெரும் அரசியல் அமைப்பையும் பெற்று விட்டது.

பாண்டிய நாட்டில் கலைகளும், மொழியும், எழுத்தும், செல்வமும், கைத்தொழில்களும், பயிர்த் தொழில்களும் வளம் பெற்றெழுந்தன. வணிகம் வளர்ந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் பெருகின. கலங்கள் கட்டப்பட்டன. யவனர்களோடு பெரும் அளவில் கடல் வாணிகம் நடைபெற்றது (1) இருமீன்கள் தீட்டிய பாண்டிய நாட்டுக் கொடிகள் பறந்த நாவாய்கள் ஆழ்கடல் தாண்டி வெளி நாடுகள் சென்று மீண்டும் வந்தன.

கோநகர்
 
பாண்டிய நாட்டிற்குப் புறநகர் (துறைமுகப் பட்டினம்)கொற்கையாகவும் பின்னர், பழைய காயலாகவும் இருந்து வந்தது. அகநகர் (கோநகர்) மதுரையாக இறுதிக் காலத்தில் இருந்து வந்தது. கோநகரில் அரசர் இருந்து ஆட்சி புரிந்து வந்தார். இளவரசர் கொற்கையில் இருந்து மன்னர்க்குத் துணைபுரிந்து வந்தார். கொற்கை அருகே கடலில் ஏராளமான முத்துக்கள் கிடைத்தன. கொற்கை, முத்துக் குளிக்கும் மூதூராக விளங்கியது. கொற்கைத் துறைமுகத்தில் யவனர்கள், அரேபியர்கள் கப்பல்களும், பாண்டியர்களின் பல்வேறு வகையான படகுகளும், தோணிகளும், அம்பிகளும், நாவாய்களும் ஏராளமாக இருந்து வந்தன. யவனர்கள் பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் கொடுத்து முத்து, மிளகு, சந்தனக் கட்டை முதலிய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

அஃக சாலை
 
பாண்டியர்கள் உள்நாட்டுச் செலாவணிக்கும் அயல் நாட்டுச் செலாவணிக்கும் ஏராளமான காசுகளை வெளியிட்டு வந்தனர். பாண்டியர் அரசாங்கத்திற்குப் பொன், வெள்ளி, செம்பு ஆகிய தாதுப் பொருள்களில் காசு வெளியிடும் அஃகசாலைகள் கொற்கையிலும் மதுரையிலும் இருந்து வந்தன. காசு வெளியிடும் இடத்திற்கு அஃகசாலை என்று பெயர். காசு வெளியிடும் நிலையம் இருக்கும் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர். கொற்கையில் காசு வெளியிடும் தெருவும் நிலையமும் அழிந்துவிட்டன. ஆனால் அத்தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் இன்றும் இருந்து வருகிறது. அப்பிள்ளையாரை மக்கள் அஃகசாலை விநாயகர் என்று அழைத்து வருகிறார்கள். உரோமர்கள், பாண்டியர்கள் அனுமதி பெற்று மதுரையருகே குடியேறித் தங்கள் செலாவணிக்குச் செப்புச் காசுகள் வெளியிட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சனி, 4 அக்டோபர், 2014

தமிழுக்கு எத்தனை பெயர்கள்?

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)


12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்


13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)


14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்..

செவ்வாய், 31 ஜூலை, 2012

தமிழனின் அறிவியல்..

தமிழர்களின் அறிவியல்..!“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம் – 725

இதே போல இந்த உடம்பினுள் 96 வேதியியல் தொழில்கள் அல்லது செயல்பாடுகள் நடக்கின்றன என்று கண்டுபிடித்தார்கள். அதாவது இந்த உடம்பும் உள்ளமும் இதனுள் இயங்குகிற உயிரும் ஆரோக்கியமாக செயல் புரியும்போது இந்த 96 செயல்களும் பிசகின்றி சீராக இயங்குகின்றன.

“முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிளுடையக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடையக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஒட்டெடுத் தார்களே!”

தமிழ் சித்தர்கள் பழங்காலத்திலேயே உடல், உயிர் என்ற இரண்டிலும் மிகத் தெளிவாக
இருந்திருக்கிறார்கள். அந்த தெளிவில்தான் மானுடம் மேம்படச் சிந்தனைத்திறனை அறிவியல் பார்வையோடு சித்தர் இலக்கியத்தின் மூலம் இன்றும் வியந்து நிற்கிற வகையில் காட்டியிருக்கிறார்கள்.

உழவு:
கரும்பு தமிழரின் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகவும் இருந்திருக்கிறது. திருவிழாக் காலங்களில் வீடுகளை வாழை மரத்தாலும், கரும்புக் கழிகளாலும் (தோகையோடு கூடிய
கரும்பு) கட்டி அலங்காரம் செய்தார்கள். வெல்லம், சர்க்கரை விற்ற வணிகருக்கு பணித
வாணிகர் என்பதே பெயர். பணித வாணிகள் நெடு மூலன் என்ற பெயரை மதுரைக்கருகில்
இருக்கிற குகையொன்றில் பிராமி எழுத்தின் அமைப்பில் கண்டுபிடித்தனர் ஆய்வாளர்கள். இது கி.மு 2200 ஆண்டுகளுக்கு முந்தியது என கடைச்சங்கச் செய்தி தெரிவிக்கிறது. அப்படியாயின்
அதற்கு முன்பே தமிழர்களுக்கு கரும்பு பயிர் செய்கையும், கரும்பிலிருந்து வெல்லம், சர்க்கரை எடுக்கிற தொழில் நுட்பமும் தெரிந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் ஐரோப்பியர் களுக்குக் கரும்பு தெரியாது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் தான் கரும்பும் வெல்லமும் மேலை நாட்டினருக்குத் தெரிய வந்தது. அதற்குப் பிறகுதான் அவர்கள் சீனியை கொண்டு வந்தார்கள்.
“ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்று அதன்காப்பு” (குறள் 1038)
இன்றைக்கு விஞ்ஞானம் விரிவடைந்தாலும் இன்றும் இதே ஐந்து கோணங்களில்தான் விவசாயம் நடக்கிறது. மேலும் சாதாரண பழமொழிகளில் கூட விவசாய அறிவியலை வைத்திருக்கிறான். இதற்கேற்ப ஏறக்குறைய 20 பழமொழிகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

உடை:
“உடுக்கைக் இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு” (குறள் 788)
இன்றைக்கு ஆங்கிலப் பெயரோடு பயன்படுத்தப்படுகின்ற உள் மற்றும் வெளி ஆடைகளுக்கானத் தமிழ்ப் பெயர்களில் தனித்துவமும் இருக்கின்றன. அவற்றைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பெண்களின் உடை: பிரா - கச்சு, மிடி - வட்டுடை, ஜாக்கெட் - வடகம்,
(வடகத்தோடு உருத்ததூசும் - கம்ப ராமாயணம்)
பெட்டிகோட் - பாவாடை, சல்வார்கமீஸ் - தழை,
மினி - சிதர், சுவிம்மிங் டிரஸ் - புட்டகம், (நீந்துடை - புட்டகம் பொருந்துவ புனைவாதுரும் - பரிபாடல்) கவுன் - கொய்யகம், ஜட்டி - அரணம், நைட்டி - இரவணி, டூபீஸ் - ஈரணி, வெட்டிங்டிரஸ் - கூறை. ஆண்களின் உடை: பனியன் - குப்பாயம்
(துதி மயிர்த்துகில் குப்பாயம் - சீவகசிந்தாமணி) பேண்ட் - கச்சம், டை - கிழி,
பெல்ட் - வார், சட்டை - மெய்ப்பை.

ஆசிரியர் மற்றோர் இடத்தில்...
“அதே நேரத்தில் வேட்டியை ‘வேஷ்டி’ என்றும்,
சேலையை சாரி என்றும் பேசுவதும்,
எழுதுவதும் மொழியே இல்லாதவர்களின்
வேலையாகும்” எனச் சாடுகிறார்.

உணவு :
‘உணவு மனிதனுக்கு அவசியமானது. அது உடல் வலிமை பெறவளர்ச்சியுற இன்றியமையாதது. அதனால்தான் புறநானூறு என்ற பழந்தமிழ் நூலில்,

‘‘நீரின்றி யமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம் (புற-18; 17-20)
எனச் சொல்லப்பட்டது. உண்டி கொடுத்தோரை (உணவு) உயிர் கொடுத்தவர் என்பதே அப்பாடல்.

குறிஞ்சி நிலம்: தேன், தினைமா, கிழங்கு, பறவைகள், ஊன் வேட்டையில் கிடைத்த உணவுகள். முல்லை நிலம்: சோளம், கேழ்வரகு, நெய், தயிர், வெண்ணெய், மோர், அவரை, துவரை

மருத நிலம் : பல்வகைச் சோறு, காய்கறிகள் நெய்தல் நிலம்: மீன், நண்டு, இறால், கணவாய், காய்ந்த மீன் (கருவாடு), நெய் கலந்த ஊன், வறுத்த ஊன், சுட்டமான், பால்சோறு, நெய்சோறு என அறுசுவை உணவையும் உண்டனர். இதுபோக ஈழத்துணவும் வந்ததாகப் பட்டினப்பாலைபகர்கிறது.

இதிலிருந்து இரு செய்திகள் தெரிகின்றன. ஒன்று உணவு வகைகள் சங்க காலத்தில் இறக்குமதியாகி இருக்கின்றன. இன்னொன்று ஈழத்திலிருந்து தமிழர்களே தமிழர்களுக்கு உணவு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும்.

இலக்கியம்:
ஒரு பிரெஞ்சு பேராசிரியரிடம் ‘எது இலக்கியம்’ என்று கேட்டபோது வந்தபதில்: ‘‘நாட்டை, மொழியை, மக்களை முன்னே வைத்து செய்யப் பெறும் எழுத்துக்களே தலைசிறந்த இலக்கியங்கள்’’ என்பதே. தமிழில் தமிழை, மனிதர்களை உயர்த்தும் இலக்கியங்களே அதிகமாக இருக்கின்றன. ஆகவேதான் அதன் ஆளுமை இன்றைய விஞ்ஞான எந்திர வாழ்விலும் ஊடுறுவ முடிகிறது.

ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கிய நூல்கள் முதன்முதலில் அச்சேறிய வரலாற்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ‘திருக்குறள் மூலபாடம்’ எனும் தலைப்பில் முதன்முதலில் கி.பி.1812இல் அச்சான திருக்குறள் பற்றியும், அதன் முகப்பு அட்டை, கடவுள் வாழ்த்துப் பகுதி இவைகளை படத்துடனும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். மேலைநாட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல் படிக்கிறார்கள். நூல் படிக்கப் படிக்க அறிவின் வேல் கூர்மையாகும். அந்த அறிவைப் பெறுவதற்குத் தாய்மொழி தமிழ் மிகமிகஅவசியமாகும்.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு. போப் அந்நூலின் முன்னுரையில்
‘வழக்கொழிந்து மாண்டு போன மொழிகளாலும், பயன்மிக உள்ளது. சாம்பலின் தலைபோல் அவற்றின் தன்மை வாழ்கின்றது. ஆயினும், இன்றும் வாழும் பண்டைய மொழிகளே சிறப்பு உடையன. வைரம் பாய்ந்த அம்மரங்களிலிருந்து பூக்க இருக்கும் கனிகள் எத்தனையோ! எனவே, தமிழர்கள் தங்கள் மொழி குறித்துக் கொண்டுள்ள தாழ்வு மனப்பான்மையினை ஒழிக்க வேண்டும்.’

தமிழிசை:

"12ஆம் நூற்றாண்டு முதல் தோன்றிய சமஸ்கிருத சங்கீத நூல்கள் சங்கீதத்திற்கு இலக்கணம் கூற முயன்றாலும் பழக்கத்தில் உள்ள இசை மரபிற்கும் இவர் கள் கற்பித்த இலக்கணத்திற்கும் தொடர்பின்றி இசை உலகில் பெரும் குழப்பங்கள் உண்டு பண்ணி வந்துள்ளன. ஆகவே, இசையின் அடிப்படை இலக்கணத்தை நாடி நம் தமிழிசையின் பிறப்பிடத்திற்குச் செல்ல
வேண்டியவர்கள் ஆகிறோம்'' என்று இசைப் பேரரசி டாக்டர் சேலம் எஸ். விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இவரின் கருத்தை உறுதி செய்வதுபோல் இசைப்பேரறிஞர் வா.சு.கோமதிசங்கரய்யர் ‘இசைத்தமிழ் இலக்கண விளக்கம்’ எனும் நூலில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பண்களின் சிறப்பை உணர்ந்த வடநாட்டு பண்டிதர் ஒருவர் முப்பத்தாறு பண்களையும் எடுத்து அவற்றிற்கு வட மொழிப்பெயரை இட்டுப் பரப்பி உள்ளார். ஆனால் ஒன்பது நிறங்களின் (இராகங்கள்) பெயர்களை மாற்றாமல் விட்டமையால் அவைகள் தமிழில் இருப்பதே, அவை தமிழிலிருந்து பெயர்ந்தது என்பது உறுதியாகிறது.

தாவரவியல்:

‘‘ஒன்று அறிவதுவே உற்று அறிவே
இரண்டு அறிவதுவே அதனோடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றோடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.’’
(தொல்காப்பியம் - பொருள் - 1526)

தாவரங்கள் உயிருள்ளவை என்றும், அவற்றுக்கு ஓர் அறிவே உள்ளது என்றும் முன்னோடியாகத்தான் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தாவரங்களுக்கு பல்வேறு வகையான காரணப்பெயர்களையும் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில் மரம், செடி, கொடி, புல்,
பூண்டு என்பன அடங்கும். இவற்றையும் தமிழனின் தாவர விஞ்ஞானம் காரணத்தோடு அறிவியல் பார்வையில் வகைப்படுத்துகிறது. ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை,
பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’ என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது. அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை இலையாகாமல் ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயராகிறது. அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள் ‘ஓலை’ என்றே சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும் அடங்கி இருக்கிறது.

மண்ணியல்:

மண்ணைக்கூடப் பழந்தமிழ் மக்கள்
1. ஆற்றுமண்,
2. சேற்றுமண்,
3. காட்டுமண்,
4. உதிரிமண்,
5.மலை மண்,
6. குளத்துமண்
என வகைப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக வேறொரு செய்தியும் உண்டு. கோயில் கட்டப்படும் நிலத்தை நன்கு உழுது அதில் நவதானியம் விதைக்க வேண்டும். அந்த விதை மூன்று நாட்களில் முளைத்தால் அது நல்ல நிலம்; ஐந்து நாட்களில் முளைத்தால் ஏறக்குறைய நல்ல பூமி; எட்டு நாட்களுக்குப் பிறகு முளைத்தால் அது மட்டமான பூமி.

சனி, 31 டிசம்பர், 2011

மலேசிய விமான நிலையத்தில் தமிழ்................

இன்று ஆங்கில புத்தாண்டில் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு . இன்று முதல் மலேசியா வானூர்தி நிலையத்தில் தமிழ் மொழியில் அறிவிப்பு . சென்னை , மதுரை வானூர்தி நிலையத்திலும் தமிழில் முதலில் அறிவிப்பு , பின்பு ஆங்கிலம் பின்பு தான் ஹிந்தி . ஆனால் வானூர்தியில் தமிழில் அறிவிப்பு இல்லை என்பது வேதனைக்குரியது. 

சிங்கப்பூர் விமானம் சேவை , மலேசியா விமான சேவை மற்றும் ஏர் ஆசியா விமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இருக்கிறது . தமிழ்நாட்டில் இருந்து செல்லக்கூடிய இந்திய விமானங்களில் ஏர் இந்திய , ஜெட் ஏர் வேஸ் போன்ற எதிலும் தமிழ் அறிவிப்பு இல்லை . இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழ் பேசும் மக்கள் தான் அழுத்தம் கொடுக்க வேண்டும் . மக்கள் நமக்கு என்ன வந்தது என்று சும்மா கிடந்தால் நம் மொழி உரிமையை நாமே இழக்கிறோம். அனைவரும் குரல் கொடுப்போம் , தமிழ் நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களிலும் தமிழ் மொழியில் அறிவிப்பு வேண்டும் என அரசு மற்றும் தனியார் விமான சேவை நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுப்போம். இந்த அழுத்தம் முக நூலின் மூலமாக நாம் தொடங்குவோம்;;;;;
திங்கள், 26 டிசம்பர், 2011

தமிழரின் விருந்தோம்பல் - அன்றும், இன்றும்;;;;;;;;;;;;;;;;;;;;;;


தமிழர்களின் பண்பாடுகளில் விருந்தோம்பலும் ஒன்று. விருந்து என்றால் புதுமை, புதியவர் என்று பொருள். விருந்தே புதுமை என்பார் தொல்காப்பியர். வீட்டிற்கு வரும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் விருந்தினர் என்கிறோம். ஆனால் பண்டைக்காலத்தில் வீடு தேடி வரும், முன் அறியாதவர்களையே விருந்தினர் என்றனர்,,,,,,,,,,,,,
 
போக்குவரத்து வசதிகள் இல்லாத அக்காலத்தில், கால்நடையாகத்தான் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. அப்படிச் செல்லும்போது உணவிற்கும், தங்குவதற்கும் செல்லும் வழியில் இருக்கும் ஊர்களையே நம்பவேண்டியிருந்தது. ஆகவே புதிதாக வருவோர்க்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழக இல்லங்களில் உருவாயிற்று. இப்படி வருவோர்கள் இளைப்பாறுவதற்கும், இரவு நேரங்களில் தங்குவதற்கும்தான் வீடுகளில் திண்னை வைத்துக் கட்டினார்கள்,,,,,,,,,,,,,,
 
இன்றும் கிராமங்களில் செளமிட்டாய், ஐஸ், கொய்யாபழம், வளையல், உப்பு போன்றவைகளை விற்கும் வியாபாரிகள் வருவார்கள். அவர்கள் இளைப்பா திண்ணையில் இடமளிப்பதோடு, தண்ணீரும் தந்து உபசரிப்பார்கள். ஆனால் நகரங்களில் வீடு கட்டும்போது, தன்னுடைய இடத்தையும் தாண்டி, பக்கத்தில் ஒரு அடி, இரண்டு அடி என்று தள்ளி சுவர் எழுப்பும் நிலையில் இருக்கும்போது, திண்ணைக்கு எங்கே போவது,,,,,,,,,,,,,
 
விருந்தோம்பல் பண்பினை கம்பர், இராமனைப் பிரிந்து அசோகவனத்தில் இருக்கும் சீதையின் வாயிலாகக் கூறுவார்,,,,,,,,,,,,,,,,
 
"அருந்து மெல்லடகு ஆரிட அருந்து மென்று அழுங்கும்
விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்
மருந்தும் உண்டு கொல் யான்கொண்ட நோய்க்கென்று மயங்கும்
இருந்த மாநிலம் செல்லரித்திடவு மாண்டெழாதாள்"   (கம்பராமாயனம்.காட்சிப்படலம்: 15)
 
என்ற பாடல் விருந்தினர்வரின் தானில்லாது இராமன் என்ன செய்வானோ என்று எண்ணிச் சீதை வருந்திய நிலையைப் புலப்படுத்துகிறது.................
 
எங்கள் வீட்டில் எப்போதும் சமைக்கும்போது, எல்லோருக்கும் போக, அதிகமாக ஒரு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைப்பார்கள். பாட்டியிடம் ஏன் என்று கேட்டபோதுதான், திடீரென வீட்டிற்கு ஏதேனும் விருந்தினர் வந்துவிட்டால் அவர்களுக்கு உணவளிக்கவே இந்த உணவு என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் இன்று நாங்கள் இந்த நேரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சென்றாலோ, இல்லை வீட்டுப் பெண்கள் தொலைக்காட்சியில் சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் சென்றாலோ, சென்றவர் பாடு திண்டாட்டம்தான்.
 
நமது முன்னோர்கள் காலத்தில் கணவன் மனைவியிடையே எழும் ஊடலைத் தீர்க்கும் மருந்தாகவே விருந்தினர் அமைவர் என்று சொல்லப்பட்டுள்ளது. விருந்தினர் வந்தால், இருவரும் ஊடலை மறந்து கவனிப்பராம். ஆதலால் தன் மனைவியின் ஊடலைத் தீர்க்க யாரேனும் விருந்தினர் வரமாட்டார்களா என்று கணவன் ஏங்குவதாக நற்றினை கூறுகிறது................
 

விருந்தோம்பலுக்குத் தனி அதிகாரமே தந்த வள்ளுவர், முகர்ந்து பார்த்தாலே வாடிவிடக் கூடிய தன்மை படைத்தவர் விருந்தினர் என்றும், அவர் முகம் வாடாமல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்பதை,,,,,,,,,,,,,,,,,,,
 
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து"
 
என்பார்.
 
தொன்றுதொட்டு விளங்கும் விருந்தோம்பலை நாம் வளர்ப்போம்! நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தருவோமாக!!!!!!